×

பாலியல் புகாரில் வெளிநாட்டிற்கு ஓட்டம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்: சிபிஐ மூலம் நடவடிக்கை

பெங்களூரு: வெளிநாட்டிற்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யும் விதமாக அவருக்கு சிபிஐ விரைவில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கும் என்றும், அந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டவுடன் கூடிய விரைவில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படுவார் என்றும் எஸ்.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்துவருகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரில் ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதியப்பட்ட நிலையில், அதன்பின்னர் பல பெண்கள் தங்களை கட்டாயப்படுத்தியும் மிரட்டியும் பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்ததாக தொடர்ச்சியாக புகார் அளித்துவருகின்றனர். வெளிநாட்டிற்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்.ஐ.டி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. பிரஜ்வல் இந்தியாவிற்குள் நுழைந்ததும், அவரை கைது செய்யும் விதமாக லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. அதேபோல, அவருக்கு எதிராக சிபிஐ விரைவில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கும் என்று முதல்வரிடம் எஸ்.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் சித்தராமையா எஸ்.ஐ.டி அதிகாரிகளுடன் நேற்று முக்கியமான ஆலோசனை நடத்தினார். அப்போது, வெளிநாட்டில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.ஐ.டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ப்ளூ கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன?
எல்லைகளை தாண்டிய நடவடிக்கைகளுக்காக சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் 8 வகையான நிறங்களில் நோட்டீஸ் பிறப்பிக்கும். ஒரு குற்றவியல் விசாரணையில் தேடப்படும் நபரை கண்டுபிடிக்க, அடையாளம் காண அல்லது அந்த நபரை கைது செய்வதற்காக கொடுக்கப்படும் அறிவிப்பு தான் ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஆகும்.

ராகுல் கடிதம்
பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி, ‘பெண்கள் மிக கொடூரமான முறையில் நடத்தப்பட்டு அவர்களின் கண்ணியம் பறிக்கப்பட்டிருக்கிறது. நமது தாய்மார்களையும் சகோதரிகளையும் பலாத்காரம் செய்தவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க அற வழியில் போராடுவது காங்கிரஸ் கட்சியின் கடமை.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளித்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ என்று வலியுறுத்தினார். ராகுல் காந்தியின் கடிதத்துக்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள முதல்வர் சித்தராமையா, ‘எஸ்.ஐ.டி விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கில் எவ்வளவு பெரிய நபர்கள் குறுக்கீடு செய்தாலும், உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும். பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீரும் துடைக்கப்படும்’ என்று சித்தராமையா பதிலளித்துள்ளார்.

ரேவண்ணா மனைவியிடம் விசாரணை
ஹொலெநரசிபுராவில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்.ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்த ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவிடமும் எஸ்.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

The post பாலியல் புகாரில் வெளிநாட்டிற்கு ஓட்டம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்: சிபிஐ மூலம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Prajwal Revanna ,CBI ,Bengaluru ,SIT ,Blue Corner ,Karnataka ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...